மாரிதாஸ் மீது வழக்கு இல்லை… போலி இ-மெயில் அனுப்பியவர் மீது நடவடிக்கை! – விசித்திர சென்னை போலீஸ்
தனியார் தொலைக்காட்சி சார்பில் தனக்கு இ-மெயில் வந்தது என்று கூறி போலியான தகவலை பரப்பிய மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அவருக்கு இ-மெயில் அனுப்பிய மர்ம நபர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று சென்னை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் இந்து மத விரோதிகள் வேலை செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் தாம் தெரிவித்துள்ளேன் என மாரிதாஸ் வீடியோ வெளியிட்டார். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூஸ்18 ஆசிரியர் இ-மெயில் அனுப்பியதாக மற்றொரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் இடம்பெற்ற மின்னஞ்சல் போலியானது என்று உறுதியானது. இதைத் தொடர்ந்து போலியான மின்னஞ்சல் உருவாக்கி போலியான தகவலைப் பரப்பியதாக மாரிதாஸ் மீது புகார் அளிக்கப்பட்டது.
ஐந்து – ஆறு நாட்கள் இது குறித்து பரிசீலனை செய்த போலீசார், மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்வது இல்லை என்று முடிவு செய்துள்ளனர். மாரிதாசுக்கு இ-மெயில் அனுப்பிய நபர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், “ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆபாசமாகவும், அறுவெறுக்கத் தக்க வகையிலும் படங்கள், செய்திகளை பரப்பினால் மட்டுமே தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்தால் கருத்து சுதந்திரத்துக்குள் தலையிட்டது போல் ஆகிவிடும் என்று கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.
தீவிர வலதுசாரிகள் எது செய்தாலும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு போலீசார் மீது உள்ளது. மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பல பதிவுகள் வெளியான நிலையில், அதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார்
செய்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என்று தி.மு.க நிர்வாகி ஒருவர் கூறியிருந்தார். அதே நேரத்தில் தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான பதிவு என்றால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது மாரிதாஸ் மீதான போலீசின் இந்த விசித்திர விளக்கம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்பதால் அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ அளிக்கவில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.