• July
    16
    Tuesday

Main Area

Mainசபரிமலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆபத்தான விளையாட்டு; பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Loading...

ராமநாதபுரம்: சபரிமலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆபத்தான விளையாட்டை விளையாடியதாக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 18-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம், தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்குமான மக்களவை தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். தமிழகம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

modi

முதலாவதாக தேனி ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: நாளை நமதே, நாற்பதும் நமதே என்பது மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது தெரிகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஏழைகளுக்காக வாழ்ந்தார்கள், மக்கள் நலத்திட்டங்களை தந்தார்கள். அவர்கள் வெற்றி பெற்ற இந்த மண்ணில் காங்கிரஸ் வேட்பாளரால் ஒன்றும் செய்ய முடியாது. பாஜக ஆட்சியில் நாடு அடைந்து வரும் வளர்ச்சியை காங்கிரஸ், திமுக-வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மக்களை திமுக-வும், காங்கிரசும் தவறாக வழிநடத்த முயற்சி செய்கின்றன. தேச பாதுகாப்பை அரசியலாக்கி, ராணுவத்தினரை காங்கிரஸ் அவமதிக்கிறது. நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ள நாம் தயாராக இல்லை.

Stalin, Rahul

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்ததை அவர்களின் கூட்டணி கட்சிகளே ஏற்கவில்லை. நமது எதிராளிகளின் ஊழல்கள் பற்றி நான் கணக்கில் வைத்திருக்கிறேன். நாட்டு மக்களை யாரும் முட்டாளாக்க விடாமல் நான் காவலாளியாக இருக்கிறேன். தேசத்தின் காவலாளியாக மக்களின் நன்மைக்காக நான் பணியாற்றி வருகிறேன் என்றார். மேலும், 1984-ஆம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், போபால் விஷவாயு கசிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யார் நியாயம் வழங்குவது என காங்கிரஸ் கட்சியின் "நியாய்" திட்டத்தை விமர்சித்தும் அப்போது மோடி பேசினார்.

இதையடுத்து ராமநாதபுரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ராமநவமி நாளன்றி இந்த புனித பூமிக்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் நீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம், மீனவர்களுக்கான தனி அமைச்சகம் மற்றும் விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்ட் மீனவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

fishermen

மிஷன் சக்தி திட்டம் பெற்ற வெற்றியை அப்துல்கலாம் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார் என கூறிய பிரதமர், அப்துல்கலாம் கண்ட கனவுகளை நாம் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். அவரது பங்களிப்பை நாடு முழுவதும் ஒவ்வொருவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே அவருக்கு நினைவுச் சின்னம் உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 50 கோடி இந்தியர்கள் தரமான சிகிச்சையை பெறுவர். சுகாதார துறையில் இந்தியா பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாக வறுமை ஒழிக்கப்பட்டு வருகிறது எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

triple talaq

முத்தலாக் முறை தடை செய்யப்பட்டதன் மூலம் இஸ்லாமிய பெண்களின் உரிமை மீட்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக அரசு உரிய உரிமையை கொண்டு வந்துள்ளது. சபரிமலை விவகாரத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகள் ஆபத்தான விளையாட்டை விளையாடின. பாஜக இருக்கும் வரை யாராலும் நம்பிக்கைகளை அழிக்க முடியாது எனவும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

sabarimala

திமுக - காங்கிரஸ் அணியின் ஒரே சிந்தனை மோடி வெறுப்பு, நாட்டின் வெறுப்பு. அழிவுப்பூர்வமான மனப்பான்மையால் எதிர்க்கட்சிகள் நாட்டை பின்னோக்கி இழுக்கின்றன. ஆனால், மேம்பாடு மட்டும் தான் பாஜக கூட்டணியின் குறிக்கோளாக உள்ளது என தெரிவித்த மோடி, காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் தாக்கியபோது அமைதியாக இருந்தார்கள். தீவிரவாதிகள் இந்தியாவை தாக்க நினைத்தால் அவர்கள் எங்கிருந்தாலும் தேடி அழிப்போம் என்றார்.

இஸ்ரோ உதவியுடன் மீனவர்களுக்கு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் கடலில் மீனவர்களுக்கு உள்ளூர் மொழியிலேயே அறிவிப்பு வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் துறைமுகங்களின் வளர்ச்சி இரட்டிப்பாக்கப்படும். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரிவித்த பிரதமர் மோடி, எல்லா துறைகளிலும் வளர்ச்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்பதே எங்கள்  இலக்கு என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.