“கருப்பு பூஞ்சை நோயினை முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேருங்கள்” – ஓபிஎஸ்
கருப்பு பூஞ்சை நோயினை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டில் ஓசூர் பகுதியில் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருவதாகவும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு ஆளாகும் நிலையில் இத்தொற்றுக்கான மருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லை என்றும், ஒரு டோஸ் மருந்து பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. கருப்பு பூஞ்சை தொற்றுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்துகள் இல்லை என்றும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விடுவதாகவும், அம்மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனரே தெரிவித்ததாக பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. இந்த நோய்த் தொற்றின் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் அதை சமாளிப்பது என்பது அரசுக்கு மிக சவாலாக மாறிவிடும்.
எனவே வருமுன் காப்போம் என்பதற்கு ஏற்ப அரசின் செயல்பாடு இருப்பது அவசியம் என்பதோடு மட்டுமல்லாமல், இதற்கு தேவையான மருந்தினை போதுமான அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளவும், இந்த நோயினை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கவும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் சேர்க்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.