நான் பதிண்டா விமான நிலையத்துக்கு உயிருடன் வந்தடைந்ததற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி.. பிரதமர் மோடி

 
மோடி

நான் பதிண்டா விமான நிலையத்துக்கு  உயிருடன் வந்தடைந்ததற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி என்று பஞ்சாப் பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லி செல்கையில் விமான நிலைய அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கூறி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறுவதாக இருந்த கூட்டத்தில் பங்கேற்று ரூ.42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். முன்னதாக தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிட்டு இருந்தார்.  முதலில் பிரதமர்  ஹெலிகாப்டர் வாயிலாக கூட்டம் நடக்கும் இடத்துக்கு செல்ல இருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி சாலை மார்க்கமாக சென்றார்.

சாலையில் பிரதமர் மோடி கன்வாய்

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியின் வரும் பாதையில் போராட்டக்காரர்கள் சாலை மறியியல் ஈடுபட்டனர். இதனால் பதிண்டா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன கன்வாய் 20 நிமிடங்கள் அப்படியே நின்றனது. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் மிகப்பெரிய குறைபாடு நடந்ததால், மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி பதிண்டா விமான நிலையத்திற்கே திரும்பி சென்று, அங்கியிருந்து டெல்லி சென்றார். 

சரண்ஜித் சிங் சன்னி

பதிண்டா விமான நிலையத்திலிருந்து டெல்லி கிளம்பி செல்கையில் பிரதமர் மோடி அங்கியிருந்து விமான நிலைய அதிகாரிகளிடம், நான் பதிண்டா விமான நிலையத்துக்கு உயிருடன் வந்தடைந்ததற்கு உங்கள் முதல்வருக்கு (சரண்ஜித் சிங் சன்னி) நன்றி  என்று கூறினார். இந்த தகவலை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல். பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.