போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
தமிழக பாஜகவின் இரண்டாவது மாநில செயற்குழு கூட்டம் கடலூர் புதுநகர் சுப்பராயலு செட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் , பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா, சி. பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் முதலாவது தீர்மானமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசியல் சாசன வரம்பை மீறி ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் நடந்த அராஜகத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எட்டாவது தீர்மானமாக ஆளுநர் விவாகரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி நாளிதழில் ‘சின்னத்தம்பி பெரியதம்பி’ என்கிற வடிவில் ஒரு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் சின்ன தம்பி, ‘’ஏண்ணே.. ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடலூரில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய உள்ளார்கள் பார்த்தியா?’’ என்று கேட்க,
அதற்கு பெரிய தம்பி, ’’பார்த்தேன் தம்பி. தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மறந்து விட்டார்கள் போலும் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றிய கூட்டத்தில், stalin is most dangerous than karunanidhi என்று, அதாவது கலைஞர் கருணாநிதியை விட ஸ்டாலின் அபாயகரமானவர் என்று கூறிய பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா அமர்ந்திருந்தார். போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு என்று தீர்மானம் நிறைவேற்றிய அவர்களைப் பார்த்து அவர் உள் மனது பாடி இருக்கும்’’ என்று கூறுவது போல் அந்த பதிலடி அமைந்திருக்கிறது.