25 தொகுதிலாம் இல்லை! ஒன்றோ, இரண்டோதான்! அமித்ஷாவுக்கு செம்மலை பதிலடி
தொகுதிகள் குறித்து அமித்ஷா பேசியது அக்கட்சியின் நிலைப்பாடாக இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் செம்மலை கருத்து தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அமித்ஷா, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தென் சென்னை மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடன் சென்னை கோவிலம்பாக்கத்தில் தனியார் மண்டபத்தில் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அமித்ஷா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியை ஜெயிக்க பாடுபடுங்கள், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 1975 பூத் உள்ளது. அதில் 128 பூத்களில் ஆட்களே இல்லாமல் உள்ளனர். எனவே பூத் கமிட்டியை வலுப்படுத்துங்கள்.” என அறிவுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செம்மலை, “நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை அதிமுகவுக்கு உள்ளது. தேர்தல் எதுவாக இருந்தாலும் கூட்டணிக்கு அதிமுகதான் வகிக்கும். கூட்டணி பேச்சுக்கு முன்பாகவே எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பாஜக முடிவு செய்வது சரியல்ல. தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க இன்னும் காலம் உள்ளது. பேச்சுவார்த்தைக்கு முன்பே தொகுதி குறித்து பேசுவது ஏற்புடையதல்ல. தொகுதிகள் குறித்து அமித்ஷா பேசியது அக்கட்சியின் நிலைப்பாடாக இருக்கலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை அண்ணா திமுக தான் கூட்டணி முடிவுகளை எடுக்கும். அதிமுக கூட்டணி கட்சிகளின் பலம் மற்றும் செல்வாக்கை பொறுத்தே அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்குவதா அல்லது 2 தொகுதி ஒதுக்குவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித்ஷாவின் கருத்தை வரவேற்கிறோம்” என்றார்.