பாஜகவுக்கு விழுந்த 4ஆவது மரண அடி!
இது பாஜகவுக்கு விழுந்த நான்காவது மரண அடி என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது. இது கர்நாடக மாநிலத்தின் தோல்வி அல்ல அகில இந்திய பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள தோல்வி என்கிறார் சிபிஎம் பாலகிருஷ்ணன்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களிலும் பாஜக 63 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க போவது உறுதியாக இருக்கிறது. பாஜக ஆட்சியை இழந்துவிட்டது என்பது உறுதியாகி இருக்கிறது . இதனால் தான், ’’எங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் கட்சியை பலப்படுத்துவோம்’’ என்று கூறி இருக்கிறார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.
காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்பதால் அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் சிவக்குமார், ’’மக்களின் காலை தொட்டு வணங்குகிறேன்’’ என்று ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கிறார் .
மோடியும் ,நட்டாவும், அமித்ஷாவும் கர்நாடகாவில் வீதி வீதியாக சென்று வாக்கு கேட்டும் கூட, கர்நாடக மாநில தலைவர் காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக அமைச்சருக்கு வெறும் 8000 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. பல அமைச்சர்களுக்கும் தோல்வி முகம்தான்.
காங்கிரஸ் வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். கர்நாடக மக்கள் பாஜகவை நிராகரித்து விட்டார்கள் என்று கூறி இருக்கிறார் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா.
கர்நாடக மாநிலத்தின் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது, ’’பாஜக கர்நாடகாவில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது . கர்நாடக சட்டமன்றத் தேர்தல் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்திருக்கிறது . மோடி -அமித்ஷா ஆகியோர் கர்நாடகாவில் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டுக் கூட பாஜக மிகப்பெரிய தோல்வியை அடைந்திருக்கிறது .
இது பாஜகவுக்கு கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல, அகில இந்திய பாஜகவிற்கும், மோடி -அமித்ஷா கூட்டணிக்கும் ஏற்பட்டிருக்கின்ற மரண அடி என்பது தான் உண்மை ’’என்கிறார்.
அவர் மேலும் , ’’இமாச்சலப் பிரதேச தேர்தல் ,டெல்லி கார்ப்பரேஷன் தேர்தல், சிம்லா மேயர் தேர்தல், தற்போது கர்நாடக மாநில தேர்தல் என்று அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர் தோல்விகளை பாஜக சந்தித்து வருகின்றது . 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி அடைவதற்கு இந்த தேர்தல்கள் தான் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கின்றன ’’என்கிறார்.