மகாராஷ்டிராவில் இன்று அமைச்சரவை விரிவாக்கம்.. பா.ஜ.க.வின் மூத்த தலைவர் தகவல்

 
பா.ஜ.க.

மகாராஷ்டிராவில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளதாக பா.ஜக.வின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 30ம் தேதியன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவ சேனா- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைத்தது. துணை முதல்வராக பா.ஜ.க.வின் தேவந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றார். அதுமுதல் இதுவரை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மட்டுமே அனைத்து துறைகளையும் கவனித்து வருகின்றனர். அமைச்சரவை விரிவாக்கம் அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று கூறப்பட்டது. 

ஏக்நாத் ஷிண்டே

ஆனால் ஆட்சிக்கு வந்து சுமார் 40 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையை விரிவாக்கம் செய்யாமல் இருந்து வந்தார். அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பா.ஜ.க. தலைமை ஒப்புதல் அளிக்காததே இதற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் கடந்த சில தினங்களுக்கு முன் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அமைச்சரவை விரிவாக்கம் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள், நீங்கள் யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் நடைபெறும் என தெரிவித்து இருந்தார்.

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ்

இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெறதாக உள்ளதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். பெயர் வெளியிட விரும்பாத பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கூறுகையில், அமைச்சரவை விரிவாக்கம் நாளை (இன்று) மும்பையில் நடைபெற உள்ளது. இது குறித்து எந்த விவரங்களையும், அமைச்சரவையில் யார் இடம் பெறுவார்கள் என்பதையும் என்னால் வெளியிட முடியாது என தெரிவித்தார்.