தனிக்கட்சியா? ஓபிஎஸ் அவசர ஆலோசனை
அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுகவின் நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை 21 ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெறுகிறது என்று அறிவித்திருக்கிறார் ஓபிஎஸ். சென்னை வேப்பெறியில் ரிதர்டன் சாலையில் இருக்கும் ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கவிருக்கிறது.
இதை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் கடந்த இரண்டு தினங்களாக ஆலோசனை நடந்து வருகிறது. தேனியிலிருந்து சென்னை திரும்பும் ஓபிஎஸ் நாளை ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெற இருக்கும் நிலையில் இன்று மாலையில் அவரது சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக ஓபிஎஸ் அணி -இபிஎஸ் அணி என்று இரண்டாக பிரிந்தது. இபிஎஸ் அதிமுக பொதுக்குழு நடத்தி நிர்வாகிகளை நியமித்து கட்சிக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார் . அதேபோல் ஓபிஎஸ் தனது தரப்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தற்போதைய செயலாளர் மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து வந்தார். ஒன்றிய செயலாளர்களும் நியமிக்கப்பட்டு வந்தனர்.
இந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள தங்களது ஆதரவாளர்களை திரட்டி கட்சியில் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் திமுக பக்கம் தாவி விட்டார். ஓபிஎஸ் அணியிலிருந்து சிலரும் எடப்பாடி பக்கம் தாவிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஓபிஎஸ் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்து தனது ஆதரவாளர்களுடன் நாளை ஆலோசனை கூட்டத்தை நடத்தவிருக்கிறார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.
அதிமுக என்றால் இபிஎஸ் தான் என்கிற அளவுக்கு அவரும் அவரது ஆதரவாளர்களும் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ் அதிமுகவில் தனது பலம் என்ன என்பதை நிரூபிக்கிறேன் என்று நாளை ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு அறிவிக்க இருக்கிறார். அவர் தனி கட்சி தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் பரவுகின்றன.