சசிகலா அதிமுக தலைமை ஏற்பேன் என்று சொன்னது அவரது ஆசைக்காகத்தான்- காமராஜ்
சசிகலா - வைத்திலிங்கம் சந்திப்பு திட்டமிட்ட ஒன்று, இது அதிமுகவை அழிக்கும் செயல் என முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார். தஞ்சை ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “மின் கட்டண உயர்வை நினைத்து மக்கள் தங்களுடைய வேதனையை தெரிவித்து வருகின்றனர். உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பதே அதிமுகவின் கோரிக்கையாகவும், மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. அ.தி.மு.கவின் ஒருங்கிணைந்த தலைவர் எடப்பாடி தான். எடப்பாடி தலைமையில் தான் அ.தி.மு.க உள்ளது. வேறு யாரும் எதைச் சொன்னாலும், அவர்கள் ஆசைக்கு சொல்லிக்க வேண்டியது தான். நடக்கப்போவதில்லை. மேலும் சசிகலா - வைத்திலிங்கம் சந்திப்பு எதார்த்தமானது அல்ல. இது திட்டமிட்டு நடைபெற்ற ஒன்று. அதிமுகவை வளம் பெற செய்யுவும், பலம் பெற செய்யவும், அதிமுகவால் பலன் அடைந்தவர்கள் நினைக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு திமுகவுக்கு துணை போற வேலையில் ஈடுபடுவது போன்ற வேலைகள் எல்லாம் அதிமுகவை அழிக்கும் வேலையாக தான் இருக்கும்” என தெரிவித்தார்.