குஜராத் மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் இன்று புதிய வாக்குறுதி.. ஆம் ஆத்மி அறிவிப்பு

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

குஜராத் மக்களுக்கு இன்று அரவிந்த் கெஜ்ரிவால் புதிய வாக்குறுதி அளிப்பார் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு டிசம்பரில் குஜராத் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தற்போது குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்துக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு ஆம் ஆத்மிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆம் ஆத்மி

அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றடைந்தார். குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத்தில் 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது, அவர்கள் திமிர்பிடித்துள்ளனர். அவர்களுக்கு (பா.ஜ.க.) மக்களுடன் எந்த தொடர்பும் இல்லை. டெல்லி முதல்வராக இருக்கும் நான், கள்ளச்சாராயம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தேன், அதேவேளையில் அவர்களை  சந்திக்க குஜராத் முதல்வர் செல்லவில்லை. இப்போது ஒரு மாற்று இருக்கிறது என தெரிவித்தார்.

பா.ஜ.க.

குஜராத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் உள்ள சோட்டாடேபூர் மாவட்டத்தில் உள்ள போடேலி நகரில் இன்று ஆம் ஆத்மி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுவார் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது. மேலும், அந்த கூட்டத்தில் குஜராத் மக்களுக்கு மற்றொரு வாக்குறுதி அறிவிப்பார், இது கட்சிக்கு ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்தப்படும் என குஜராத் ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் என்ன வாக்குறுதி அளிப்பார் என்று குஜராத் மக்களிடம் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.