கைவிட்ட பாஜக! கை கொடுத்த திமுக
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் சொல்லிவந்தாலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அழைப்பதை பாமக மட்டுமல்லாது பாஜகவும் தவிர்த்துள்ளது. இந்த விசயத்தில் திமுக மட்டும் ஓபிஎஸ்க்கு கை கொடுத்திருக்கிறது.
ஓபிஎஸ் பின்னால் பாஜக இருக்கிறது. பாஜகவின் தயவில்தான் ஓபிஎஸ் இயங்கி வருகிறார். எடப்பாடி ராகுல் பக்கம் சாய்கிறார் என்றெல்லாம் பேச்சு இருந்தது. ஆனால், பாஜகவோ எடப்பாடி பக்கம்தான் நிற்கிறது என்கிறார்கள் அதிமுகவினர். அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று சொல்லும் அண்ணாமலை கூட, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடிக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார். இதே அண்ணாமலை, , ஓபிஎஸ் புதிய நிர்வாகிகளை நாளை அறிவிக்கும்போது வாழ்த்து சொல்வார என்ற கேள்வி எழுந்திருகிறது.
அதிமுக அலுவலகத்தின் மோதல், சீல் வைப்பு விவகாரத்தில் திமுகவின் தயவில் ஓபிஎஸ் இயங்குகிறார் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர் எடப்பாடியும் அவரது அணியினரும்.
அதிமுகவின் சட்டப்படி இன்று வரைக்கும் ஓபிஎஸ்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். அந்த வகையில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ்சிடம்தான் கடித போக்குவரத்து வைத்துக்கொண்டிருக்கிறது என்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ். ஆனாலும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று ஒபிஎஸ்சை அழைப்பதை பாமகவும் நிறுத்திக்கொண்டு விட்டது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
’’முன்னாள் முதல்வர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அண்ணன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!’’என்று அண்ணாமலை காலையில் தெரிவித்திருந்த நிலையில்,
மதியம், ’’கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்’’என்று தெரிவித்திருந்தார் ஸ்டாலின் .
ஒருங்கிணைப்பாளர் என்று முதல்வர் சொன்னதற்கு பின்னர் ஒரு பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் பாஜக தரப்பில், ‘’சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான திரு.பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். அவர் பூரண நலம் பெற்று பொதுப்பணியை முழு உத்வேகத்துடன் விரைவில் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்’’என்றார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
முதல்வர் சொன்ன பிறகும்கூட முருகன் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லவில்லை.
சட்டமன்றத்தில் கருணாநிதியை ஓபிஎஸ் புகழ்ந்ததும், பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலினுடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டதும், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி., திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டியதும் தான் ஓபிஎஸ்சை ஓரங்கட்டுவதற்கான முக்கிய காரணமாக சொல்லி வருகிறது எடப்பாடி தரப்பு. இதனால்தான் ஓபிஎஸ் பின்னணியில் திமுக இருக்கிறது என்று குற்றம்சாட்டி வருகிறார் எடப்பாடி. இந்நிலையில், பாஜக தவிர்த்ததை திமுக செய்தது ஏன்? என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது. அதேநேரம் பாஜக இந்த விசயத்தில் கைவிட்டாலும் கூட திமுக கை கொடுத்ததில் புதுத்தெம்பில் இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு.