கட்சி பதவி ராஜினாமா.. குலாம் நபி ஆசாத்தை தொடர்ந்து ஆனந்த் சர்மா... காங்கிரஸ் அதிர்ச்சி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை தொடர்ந்து அந்த கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கட்சி பதவியை ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமை கடந்த சில தினங்களுக்கு முன் பிரசாரக் குழு ஒன்றை உருவாக்கி தலைவர்களை நியமித்தது. கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத்தை ஜம்மு காஷ்மீர் பிரசாரக் குழு தலைவராக காங்கிரஸ் தலைமை நியமனம் செய்தது. ஆனால் அடுத்த சில மணி நேரத்திலேயே அப்பதவியை குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்தார். மேலும் மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் விலகினார். தனது உடல்நிலை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்ததாக சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியததாக தகவல். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், இமாச்சல பிரதேச காங்கிரஸின் வழிகாட்டு குழுவின் தலைவர் பதவியை ஆனந்த் சர்மா ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், கட்சியின் எந்த கூட்டத்துக்கும் என்னை ஆலோசிக்கவோ அல்லது அழைக்கவோ செய்யாததால் என சுயமரியாதை புண்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் எதிர்வரும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் தலைமை மற்றும் அமைப்பில் மாற்றங்கள் வேண்டும் என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய ஜி23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோர் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குலாம் நபி ஆசாத்தும், ஆனந்த் சர்மாவும் பதவியை ராஜினாமா செய்து கட்சி தலைமைக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிப்பதாக கூறப்படுகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்து இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.