2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாமக ஆட்சி அமைக்கும் - அன்புமணி ராமதாஸ்
நூல் விலை உயர்வால் பின்னலாடைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பஞ்சு நூல் பதுக்கல்காரர்கள் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பல்லடத்தில் கட்சி கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “மத்திய மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டித்தரும் பின்னலாடை தொழில் நிறைந்த பகுதியான திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை உயர்வின் காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை மற்றும் வருவாய் இழந்துள்ளனர்.எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக பஞ்சு நூல் பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவற்றை வெளியே கொண்டு வர வேண்டும்.சர்வதேச சந்தையில் வெளிநாடுகளில் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி நமது பின்னலாடை ஏற்றுமதிக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் தரவேண்டும்.
அதேபோல் பல்லடத்தில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது.ரிங் ரோடு அமைக்க வேண்டும்,மேம்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது.அதற்கு அறிவிப்புகள் வந்தாலும் பணிகள் மேற்கொள்ளப்படவைல்லை.பேருந்து நிலையம் எதிரே இயங்கிவரும் மதுக்கடையை மாவட்ட அரசு நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அமைச்சர்களின் ஊழல் முறைகேடு பட்டியல் வெளிவரும் என்று கூறிவரும் நிலையில் இதுவரை அது போன்று பட்டியல் ஏதும் வெளியாகவில்லை என கேள்வி எழுப்பியதற்கு அவர்கள் அரசியல் செய்கிறார்கள் அவர்களுக்கும் பாமகவுக்கும் வேறுபாடு உள்ளது பாமகவை பொருத்தவரை மக்களின் பிரச்சினைகளை எடுத்துச்சொல்லி கடந்த அதிமுக திமுக ஆட்சி காலங்களில் அப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதையே முக்கியத்துவமாக பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது என்றும் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு 2.0 செயல்திட்டத்தை தங்களது கட்சி செயல்படுத்தி வருகிறது. 2026 இல் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார். அதைப்போல் எண்ணிக்கையை பொருத்து எதிர்க்கட்சி என்பது கிடையாது சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து எதிர்க்கட்சி எது என்பதை தீர்மானித்து விட முடியாது இன்றைக்கு நாங்கள் தான் எதிர்க்கட்சி எதிரி கட்சி அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.