கருப்பு உடை அணிந்து போராட்டம், வழக்குகளை திரும்ப பெற அமலாக்கத்துறைக்கு காங்கிரஸ் அழுத்தம்.. பா.ஜ.க. தாக்கு

 
கருப்பு உடை அணிந்து காங்கிரஸார் போராட்டம்

கருப்பு உடைகள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் என்ற போர்வையில், வழக்குகளை திரும்ப பெற அமலாக்கத்துறைக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்க விரும்புகிறது என்று ஹரியானா அமைச்சர் அனில் விஜ் குற்றம் சாட்டினார்.

கடந்த மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் விலைவாசி உயர்வு மற்றும் தங்களது தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை ஆகியவற்றுக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடு முழுவதும் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனில் விஜ்

காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடை அணிந்து போராடியதை ஹரியானா பா.ஜ.க அமைச்சர் கிண்டல் செய்துள்ளார். ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் இது தொடர்பாக கூறுகையில், முக்கிய பிரச்சினை இதுதான், சுனாரியில் (ஆடை) ஒரு கறையை உணர்ந்தேன், அதை எப்படி மறைப்பது, எப்படி தப்பிப்பது. இந்த பிரச்சினையால் அமலாக்கத்துறைக்கு அழுத்தம் கொடுக்க சத்தியாகிரகம் செய்கிறார்கள். 

அமலாக்கத்துறை

மகாத்மா காந்தி கூட சத்தியாகிரகம் செய்தார். ஆனால் அவர் ஒரு போதும் மோசடிகளையோ திருடர்களையோ மறைக்கவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் ஒரு காலத்தில் வெள்ளை ஆடைகளை அணிந்தனர். ஆனால் காலப்போக்கில், அவர்களின் கருப்பு செயல்களால் அவர்கள் கருப்பு நிறமாகி விட்டனர். கருப்பு உடைகள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் என்ற போர்வையில், வழக்குகளை திரும்ப பெற அமலாக்கத்துறைக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்க விரும்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.