பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள திமுகவுக்கு தகுதியில்லை - அண்ணாமலை
புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் பாஜக சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அண்ணாமலை,"திமுக அமைச்சர்கள் உப்பு தின்றிருக்கிறார்கள், தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும், இன்னும் 6 மாதத்தில் எதிர் கட்சி பாஜக என்று திமுக சொல்லும், ஆட்சிக்கு வருவதற்கான படிநிலைகளில் 3வது இடத்தில் தற்போது பாஜக உள்ளது. சமூக நீதி, சம நீதி என பேசிக்கொண்டிருக்கும் திமுக ஆட்சியில், சுதந்திரத் தினத்தன்று 23 ஊராட்சி மன்ற தலைவர்கள் கொடியேற்ற அனுமதி அளிக்கவில்லை. 22 ஊராட்சி மன்ற தலைவர்கள், அவர்களது அலுவலக நாற்காலியில் அமர அனுமதி வழங்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியில் இந்த அவலம். இதற்கு காரணம் அவர்கள் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் என்பதால் தான்.
பாஜக - ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டணி வைப்பதற்கு தகுதி வேண்டும். குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது. ஊழலற்ற அரசாங்கம் இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள திமுகவுக்கு தகுதியில்லை” என்றார்.