அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து பாஜக எந்த கருத்தும் கூறாது - அண்ணாமலை
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் குட்டிக்கரணம் போட்டாலும், பொதுவேட்பாளரை நிறுத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது. பா.ஜ.க வேட்பாளரை வைத்தே ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்து விடுவோம் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியில் இணைந்தனர்.
இந்நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “ஜனாதிபதி யார் என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். பா.ஜ.க வில் 49 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் குட்டிக்கரணம் போட்டாலும், பொதுவேட்பாளர் நிறுத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது. பாஜக வேட்பாளரை வைத்தே நாங்கள் தனியாக ஜெயித்து விடுவோம். அதிமுகவை பொறுத்தவரை அவர்களுடைய கட்சிகளை எப்படி நடத்தவேண்டும், எப்படிப்பட்ட தலைவர்கள் இருக்க வேண்டும் என முழுமையாக தீர்மானிக்க கூடிய சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. எந்த கட்சிகள் கருத்தைக் கூறினாலும் அது சரியாக இருக்காது, அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து பாஜக எந்த கருத்தும் கூறாது” என தெரிவித்தார்.