”கால சக்கரத்தை மாற்றியமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் 2008ம் ஆண்டு மோடி பிரதமராக மாற்ற வரம் கேட்பேன்”
இலங்கை விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு பிரச்சனையை உண்டாக்குவது இல்லை தீர்வு காண்பது தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை தி நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய அரங்கில் நடைபெற்றது. இதில் பழ நெடுமாறன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக வழக்கறிஞர் பாலு, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், திருச்சி வேலுச்சாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்
கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இங்கு நான் கலந்து கொண்டதால் பல தலைவர்கள் வராமல் இருக்கலாம். அவர்களும் பல்வேறு காலக்கட்டங்களில் இலங்கை மக்களுக்காக போராடியுள்ளார். பாஜகவின் சரித்திரத்தை புரட்டி பார்க்கும் போது எப்போதும் பிரச்னைக்கு ஒரு அங்கமாக இருந்தது இல்லை. கச்சதீவு விவகாரத்தில் வாஜ்பாய் பேசியது தற்போது உள்ளது. தமிழக பாஜக வேண்டாத கட்சியாக வேண்டாத கொள்கையாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் இறுதி போரின் போது, இந்தியாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக மட்டும் இருந்திருந்தால் நம் சொந்தங்கள் பாதுகாக்க பட்டிருப்பார்கள்.கால சக்கரத்தை மாற்றியமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் 2008 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக மாற்ற வரம் கேட்டிருப்பேன். இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள்” எனக் கூறினார்.