அரசு பள்ளிகள் விவகாரம்... நான் எப்ப பார்க்க வரணும்ன்னு சொல்லுங்க.. அசாம் முதல்வரிடம் கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால்
அசாம் அரசு பள்ளிகளை நான் பார்வையிட எப்போது வர வேண்டும் என்று சொல்லுங்க என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார்.
டெல்லி யூனியன் பிரதேச முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில தினங்களுக்கு முன் டிவிட்டரில், அசாமில் சில பள்ளிகள் மூடப்படுகிறது என்ற செய்தியின் இணைப்பை பகிர்ந்து, பள்ளிகள் மூடுவது தீர்வாகாது, நாடு முழுவதும் அதிகமான பள்ளிகளை திறக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவித்தார். இதற்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா பதிலடி கொடுத்தார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டிவிட்டரில், தொடர்ச்சியான டிவிட்டுகளில், அன்புள்ள அரவிந்த் கெஜ்ரிவால் ஜி, உங்கள் அறியாமை வேதனை அளிக்கிறது. நான் உங்களுக்கு உதவுகிறேன்.
டெல்லியை விட அசாம் பெரியது. எங்களின் 44,521 அரசு பள்ளிகள் 65 லட்சம் மாணவர்களுக்கு கற்பிக்கின்றன-உங்களிடம் (டெல்லியில்) ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகள் மட்டுமே உள்ளது. அசாமில் 2 லட்சத்துக்கும் அதிகமான அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், 1.18 லட்சம் மதிய உணவு பணியாளர்கள் உள்ளனர். புரிந்து கொள்வீர்களா? ஆமாம், நீங்கள் அசாமில் இருக்கும்போது, நீங்கள் மிகவும் தீவிரமாக விரும்புகிறீர்கள், உங்கள் மொஹல்லா கிளினிக்கை விட 1000 மடங்கு சிறந்த எங்கள் மருத்துவ கல்லூரிகளுக்கு உங்களை அழைத்து செல்வேன். மேலும் எங்கள் பிரகாசமான அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை சந்திக்கவும். இந்தியாவை நம்பர் 1 ஆக்குவதை பற்றி கவலைப்படுவதை விட்டுவிடுங்கள், மோடி ஜி அதை செய்கிறார் என பதிவு செய்து இருந்தார்.
அசாமுக்கு வந்து எங்க அரசு பள்ளிகளை வந்து பாருங்க என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதை பிடித்துக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், நான் எப்போதும் வர வேண்டும் என்று சொல்லுங்க என்று அசாம் முதல்வரிடம் பதில் கேள்வி கேட்டுள்ளார். இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், ஒரு பழமொழி உண்டு, நான் எப்போது வர வேண்டும் என்று யாராவது கேட்டால், எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று அவர்கள் சொல்வார்கள். அதற்கு எப்போதும் வராதே என்று அர்த்தம். உங்கள் அரசு பள்ளிகளை பார்க்க நான் எப்போது வர வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டேன். நீங்கள் என்னிடம் பதில் சொல்லவில்லை. என்னிடம் சொல்லுங்கள், நான் எப்போது வர வேண்டும், அப்போதுதான் என்னால் வர முடியும். என பதிவு செய்து இருந்தார்.