ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. வலை வீசியதாக குற்றச்சாட்டு.. கெஜ்ரிவால் வீட்டில் இன்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாகவும், டெல்லி அரசை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது வீட்டில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.யும், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் சிங் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பார்தி மற்றும் குல்தீப் யாதவை பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் தொடர்பு கொண்டு நீங்கள் பா.ஜ.க.வில் இணைந்தால் உங்களுக்கு தலா ரூ.20 கோடி வழங்கப்படும். மற்ற எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வில் இணைத்தால் ரூ.25 கோடி வழங்கப்படும் என்று பேரம் பேசியுள்ளனர்.
பா.ஜ.க.வில் இணையாவிட்டால் மணிஷ் சிசோடியா போல் பொய் வழக்குகள் தொடரப்பட்டு, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை எதிர்கொள்ள நேரிடும் மிரட்டல் விடுத்துள்ளனர். பிரதமர் மோடி ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களை பா.ஜ.க.வுக்குள் கொண்டு வரவும், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசை கவிழ்க்கவும் முயற்சி செய்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், ஆம் ஆத்மி தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ரெய்டுகள் போன்ற தற்போதைய அரசியல் சூழல்கள் மற்றும் டெல்லி அரசை பா.ஜ.க. கவிழ்க்க முயற்சிப்பதாகக் கூறப்படும் அறிக்கைகள் குறித்து விவாதிக்க இன்று காலை 11 மணிக்கு தனது இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்துக்குஅரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் டெல்லியில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.