பா.ஜ.க. தனது செய்தி தொடர்பாளர்களை வேண்டுமென்றே அனுப்பி ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுகிறது.. ஓவைசி
பா.ஜ.க. தனது செய்தி தொடர்பாளர்களை வேண்டுமென்றே அனுப்பி ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுகிறது என அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.
ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக சுமார் 11 நாட்களுக்கு முன் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் விவாதத்தில் பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசுகையில், நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முகமது நபி மற்றும் இஸ்லாம் மதத்துக்கு எதிரான தவறான மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதாகவும் நுபுர் சர்மாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டது. மேலும், நபிகள் நாயகத்துக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்களின் கருத்துக்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் எதிரொலியாக நுபுர் சர்மாவை பா.ஜ.க.வை இடைநீக்கம் செய்தது. மேலும், டெல்லி பா.ஜ.க.வின் ஊடக பொறுப்பாளர் நவீன் குமார் ஜிண்டாலையும் பா.ஜ.க. இடைநீக்கம் செய்தது. இந்நிலையில், பா.ஜ.க. தனது செய்தி தொடர்பாளர்களை வேண்டுமென்றே அனுப்பி ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுகிறது என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார். நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: இந்தியா முகத்தை இழந்து விட்டது. நாட்டின் வெளியுறவுக் கொள்கை அழிக்கப்பட்டது. விளிம்பு பிரதானமாகி விட்டது. நான் நுபுர் சர்மாவை கைது செய்யக் கோருகிறேன், இடைநீக்கம் மட்டுமல்ல. வெளியுறவுத் துறை அமைச்சகம் பா.ஜ.க.வின் அங்கமாகி விட்டதா? வளைகுடா நாடுகளில் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்பு குற்றங்களும் வன்முறைகளும் நடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பா.ஜ.க. தனது செய்தி தொடர்பாளர்களை வேண்டுமென்றே அனுப்பி ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுகிறது.
சர்வதேச அரங்கில் அதன் தலைவர்களின் கருத்துகளுக்கு எதிர்வினைகளை எதிர்கொண்ட பிறகே பா.ஜ.க. நடவடிக்கை எடுக்கிறது. கத்தாரில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு மரியாதை செலுத்தும் விருந்து நிகழ்ச்ச ரத்து செய்யப்பட்டது. இரண்டு வளைகுடா நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் எதிர்ப்பை (முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து) இந்திய தூதர்களை அழைத்தன. முன்னதாக பிரதமரிடம் முறையிட்டேன், ஆனால் அவர் வளைந்து கொடுக்கவில்லை. வளைகுடாவில் விஷயம் வெடித்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை விரைவில் செய்திருக்க வேண்டும். முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தங்கள் செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதை உணர பா.ஜ.க.வுக்கு 10 நாட்கள் தேவைப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.