பில்கிஸ் பனோ வழக்கு குற்றவாளிகள் விடுதலை.. ஒரு குறிப்பிட்ட மத மக்களுக்கு பா.ஜ.க. முற்றிலும் சார்புடையது.. ஓவைசி தாக்கு
பில்கிஸ் பனோ வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை குறிப்பிட்டு, ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும் மக்களுக்கு பா.ஜ.க. முற்றிலும் சார்புடையது என்று அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.
2002ம் ஆண்டில் குஜராத் கலவரத்தின்போது, முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பனோ கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். மேலும் பில்கிஸ் பனோ கண் முன்பே அவரது மகள் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. கடந்த 15 ஆண்டுகளாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் தங்களை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இதனையடுத்து அவர்களது தண்டனை குறைக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், 11 ஆயுள் தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். இதனை அசாதுதீன் ஓவைசி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து பெண்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கும் என்று பிரதமர் பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது (பில்கிஸ் பனோ குற்றவாளிகள் விடுதலை) முஸ்லிம் சமூகத்திற்கு தவறான செய்தியை அனுப்புகிறது மற்றும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது.
இது மீண்டும் பில்கிஸ் பனோவுக்கு எதிரான குற்றம். பில்கிஸ் பனோவுக்கு புதிய காயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க.வில் நல்ல புத்தி நிலவும் என்று நான் நம்புகிறேன். ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும் மக்களுக்கு பா.ஜ.க. முற்றிலும் சார்புடையது. கோத்ராவுக்காக மக்கள் ஏன் சிறையில் இருக்கிறார்கள்?. அவர்கள் சட்டத்தின் ஆட்சியை பற்றி கவலைப்படுவதில்லை. மீண்டும் ஒரு குற்றத்தை செய்கிறார்கள், அவர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. குஜராத்தில் தேர்தலுக்கு மாநில தேர்தலுக்கு முன்னதாக அது திருப்திப்படுத்தும் அரசியல். இவ்வாறு அவர் தெரிவித்தார்.