பா.ஜ.க.வுக்கு எந்த சித்தாந்தமோ, கொள்கையோ, ஆட்சி மாதிரியோ கிடையாது... அசோக் கெலாட் தாக்கு

 
அசோக் கெலாட்

பா.ஜ.க.வுக்கு எந்த சித்தாந்தமோ, கொள்கையோ, ஆட்சி மாதிரியோ கிடையாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

இந்த ஆண்டு டிசம்பரில் குஜராத் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதே அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி விட்டன. நாட்டின் பாரம்பரியமிக்க கட்சியான காங்கிரஸூம் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் காங்கிரஸ் தலைமை குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கு மூத்த பார்வையாளராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை நியமனம் செய்தது.

பா.ஜ.க.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான மூத்த பார்வையாளர் அசோக் கெலாட், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக கடந்த புதன்கிழமையன்று இரண்டு நாள் பயணமாக  குஜராத் சென்றார். குஜராத் பயணத்தின் கடைசி நாளான நேற்று அசோக் கெலாட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாடு முழுவதும் பா.ஜ.க.வால் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் (பா.ஜ.க.வினர்) பாசிஸ்டுகள், மதப் பிரச்சினையில் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள்.

மோடி

மற்றபடி, பா.ஜ.க.வுக்கு எந்த சித்தாந்தமோ, கொள்கையோ, ஆட்சி மாதிரியோ கிடையாது. இந்தியாவை இந்து ராஷ்டிராவாக (தேசம்) மாற்ற பா.ஜ.க. முயற்சித்தால், பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட கதியே நம் நாடும் சந்திக்கும். மதத்தின் அடிப்படையிலான அரசியல் எல்லாவற்றை காட்டிலும் எளிதானது. அடால்ப் ஹிட்லர் கூட அதில் ஈடுபட்டார். குஜராத் மாடல் என்ற பெயரில் பா.ஜ.க. மக்களை தவறாக வழிநடத்தியது. 2017 குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு மிக அருகில் இருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி தன்னைத் தானே முன்னிறுத்தி, பாலிவுட் நடிகராக நடந்து கொண்ட விதத்தில் நாங்கள் தோற்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.