நான் மிகவும் பணிவான மற்றும் எளிய மனிதனாக உருவெடுத்துள்ளேன் என்பது மோடிக்கு தெரியும்... அசோக் கெலாட்
நான் மிகவும் பணிவான மற்றும் எளிய மனிதனாக உருவெடுத்துள்ளேன் என்பது மோடிக்கு தெரியும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் அபு சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் காலதாமதமாக கலந்து கொண்டார். இரவாகி விட்டதால் பிரதமர் மோடி அந்த நிகழ்ச்சியில் பேசவில்லை. ஒலிபெருக்கி விதிகளுக்கு கீழ்ப்படிய வேண்டியிருந்ததால் அவர் உரையாற்றவில்லை. இதனையடுத்து பொதுமக்கள் முன் மூன்று முறை மண்டியிட்டு அவர்களுடன் பேச முடியாமல் போனதற்கு மோடி மன்னிப்பு கேட்டார். மோடியின் இந்த செயலை அசோக் கெலாட் கிண்டல் செய்துள்ளார்.
இது தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது: ராஜஸ்தானில் அசோக் கெலாட் மிகவும் பணிவான மனிதராக, எளிய மனிதராக உருவெடுத்துள்ளார் என்பது அவருக்கு (மோடிக்கு) தெரியும். சிறு வயது முதலே இது என் பிம்பம். இதில் மோடி எப்படி போட்டியிடுவார்?. அவர் என்னை விட தாழ்மையுடன் தோன்ற விரும்பினார். ஆனால் அவர் இந்த செய்தியை வழங்கவில்லை. அவர் என் ஆலோசனையை பின்பற்றுவதில்லை. மூன்று முறை மண்டியிட்டு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?.
நம்முடைய (காங்கிரஸ்) வேலைகள் நன்றாக இருந்தும், ஒவ்வொரு முறையும் அரசாங்கம் மாறிக் கொண்டே இருக்கிறது. முன்னதாக மோடி அலையில் வாக்காளர்கள் அலைக்கழிக்கப்பட்டதால் நாம் தோற்றோம். நாம் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் (2019 தேர்தல்களில்) வெற்றி பெற்றோம், ஆனால் தோற்றோம். எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன். ஊழியர்களுடன் தொடர்பு இல்லாததது (வேலை நிறுத்தத்தை குறிப்பிட்டு) எனது முந்தைய அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.