ராகுல் காந்தி தற்போது சதாம் உசேன் போல் இருக்கிறார்.. அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா சர்ச்சை பேச்சு
ராகுல் காந்தி தற்போது சதாம் உசேன் போல் இருக்கிறார் என்று அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த சில தினங்களுக்கு முன் ராகுல் காந்தி ஒரே ஒரு நாள் பிரச்சாரம் செய்து விட்டு, தனது இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு சென்று விட்டார். இந்நிலையில், தற்போது தாடியுடன் இருக்கும் ராகுல் காந்தி தோற்றத்தை, ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுடன் அசாம் முதல்வர் ஒப்பிட்டு பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பிரச்சாரம் செய்தார். அப்போது, ராகுல் காந்தியை ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுடன் ஒப்பிட்டு ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேசினார். ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது: ராகுல் காந்தி தற்போது சதாம் உசேன் போல் இருக்கிறார். ராகுல் காந்தி விசிட்டிங் பேராசிரியரை போல மாநிலத்திற்கு செல்கிறார்.
அவர் இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. ராகுல் காந்தி தேர்தல் நடத்தப்படாத இடங்களுக்கு மட்டுமே செல்கிறார். ஒருவேளை அவர் தோல்வி பயத்தில் இருக்கலாம். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க பாலிவுட் நட்சத்திரங்களுக்கு காங்கிரஸ் பணம் கொடுத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பாலிவுட் நடிகை பூஜாபட் மற்றும் அமோல் பலேகர் ஆகியோர் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்களில் அடங்குவர்.