ஆடியோ சர்ச்சை! மதிமுக எம்.எல்.ஏ விளக்கம்
அண்ணாமலை ஆடியோ சர்ச்சை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, மதிமுக எம்எல்ஏ ரகுராமன் ஆடியோ சர்ச்சை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. கோரிக்கை மனு மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்ட மாற்றுத்திறனாளிடம், நான் உங்கள் வேலைக்காரன் அல்ல என்று எரிச்சல் பட்ட எம்எல்ஏவின் ஆடியோ சாத்துர் பகுதி மக்களிடையே சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருந்தது. அது குறித்து எம்எல்ஏ விளக்கம் அளித்திருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியில் ஊறுகாய் வியாபாரம் செய்யும் திருமலை குமார் என்கிற மாற்றத்திறனாளி கடந்த ஜூலை மாதம் தாயில்பட்டி வந்த சாத்தூர் மதிமுக எம்எல்ஏ ரகுராமனிடம் தனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும் என்று மனு வழங்கி இருக்கிறார். அந்த மனுவின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக எம்எல்ஏ விற்கு செல் போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் திருமலை குமார்.
திருமலை குமார் பேசியதும், அவசரப்பட்டால் இங்கு எந்த வேலையும் நடக்காது. நான் வேலைக்காரன் அல்ல. யாரையாவது வைத்து இந்த வேலையை பார்த்துக் கொள்ளுங்கள். அதிகாரிகள் யாரும் சொன்னவுடன் செய்து விட மாட்டார்கள். உங்களுடைய மனுவை தனியாக எடுத்து வைத்து விடுகிறேன் என்று எரிச்சல் பட்டிருக்கிறார்.
மாற்றுத்திறனாளியிடம் எரிச்சல் பட்டு பேசிய எம் எல் ஏ வின் ஆடியோ சாத்தூர் பகுதியில் மக்கள் இடையே வைரலாகி வருகிறது. இது குறித்து
திருமலை குமார், அரசு நல திட்டத்தின் கீழ் மூன்று சக்கர வாகனத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். அந்த வாகனம் மூலம் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள உதவியாக இருக்கும் என்றுதான் எம்எல்ஏவிடம் மனு வழங்கியது குறித்து கேட்டேன் என்கிறார்.
ஆடியோ சர்ச்சை குறித்து ரகுராமன் எம் எல் ஏ, நான் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். எல்லோரிடமும் என் செல்போன் எண்ணை கொடுத்திருக்கிறேன். யார் எப்போது அழைத்தாலும் பேசுவேன். மூன்று சக்கர வாகனம் பற்றி அதிகாரியிடம் பேசிய போது 70% மாற்றத்திறனாளிக்கு மட்டுமே மூன்று சக்கர வாகனம் வழங்கப்படும் என்று சொல்லிவிட்டார்கள். திருமலை குமாருக்கு 60% மட்டுமே மாற்றுத் திறனாளி உள்ளது என்று அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஆனாலும் அவருக்கு மூன்று சக்கர வாகன வழங்கு வலியுறுத்தி இருக்கிறேன். நிலைமை இப்படி இருக்கும்போது இவர் அடிக்கடி செல்போனில் அழைத்து தொந்தரவு செய்கிறார். அதனால் தான் அப்படி பேசி விட்டேன் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.