ராகுல் காந்தி ராமரின் அவதாரம் என்றால், எதை உட்கொள்வதால் குளிர்ச்சி தெரியவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும்.. பா.ஜ.க.

 
வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி

ராகுல் காந்தி ராமரின் அவதாரம் என்றால், தான் எதை உட்கொள்வதால் குளிர்ச்சியை உணரவில்லை என்பதை தனது படையிடம் (காங்கிரஸ் தொண்டர்கள்) அவர் சொல்ல வேண்டும் என்று பா.ஜ.க.வின் துஷ்யந்த் கவுதம் தெரிவித்தார்.

டெல்லியில் நிலவும் கடும் குளிரை சமாளிக்க அங்குள்ள மக்கள் கதகதப்பாக வைத்திருக்க உதவும் ஆடைகளை அணிந்து வெளியே செல்கின்றனர். இந்த அளவுக்கு கடுமையான குளிரிலும் ராகுல் காந்தி கடந்த திங்கள் கிழமையன்று காலையில் அரைக் கை  டி-சர்ட் அணிந்து முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். 

காங்கிரஸ்

கடும் குளிரிலும் அரைக் கை டி சர்ட் அணிந்து ராகுல் காந்தி நினைவிடங்களுக்கு சென்றதை காங்கிரஸ் தலைவர்கள் பெருமையாக பேசினர். குறிப்பாக ராகுல் காந்தியை யோகி மற்றும் பகவான் ராமருடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர்கள் பேசினர். ராகுல் காந்தியை பகவான் ராமருடன் காங்கிரஸ் தலைவர்கள் ஒப்பிட்டு பேசியதற்கு பா.ஜ.க. கடும் எதிர்வினையாற்றியுள்ளது.

துஷ்யந்த் கவுதம்

பா.ஜ.க.வின் துஷ்யந்த் கவுதம் இது தொடர்பாக கூறுகையில், ராகுல் காந்தி ராமரின் அவதாரம் என்றால், தான் எதை உட்கொள்வதால் குளிர்ச்சியை உணரவில்லை என்பதை தனது படையிடம் (காங்கிரஸ் தொண்டர்கள்) அவர் சொல்ல வேண்டும். ராகுல் காந்தியின் படை ஏன் ஆடையின்றி அலைவதில்லை. பகவான் ராமரின் படை (வானர படை) செய்தது போல் காங்கிரஸ்காரர்கள் நிர்வாணமாக உலாவ வேண்டும் என தெரிவித்தார்.