தெலங்கானா அரசு 5 லட்சம் டன் நெல்லை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் ஆனால் அதை கள்ளச்சந்தைப்படுத்துகிறது.. பா.ஜ.க.

 
நெல்

தெலங்கானா அரசு 5 லட்சம் டன் நெல்லை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் ஆனால் அதை அவர்கள் செய்யாமல் நெல்லை கள்ளச்சந்தைப்படுத்துகிறது என்று பா.ஜ.க. எம்.பி. டி. அரவிந்த் குற்றம் சாட்டினார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் பயிர்கள் கொள்முதல் தொடர்பாக மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதாவது, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தை போன்று, தெலங்கானாவில் யாசங்கி பயிர்கள் முழுவதையும் மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் ஏப்ரல் 2ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜக. பதிலடி கொடுத்துள்ளது. நிஜாமாபாத் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. எம்.பி. டி. அரவிந்த் கூறியதாவது: 

கே.சந்திரசேகர் ராவ்

2014ம் ஆண்டு  மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தெலங்கானாவின் நெல் கொள்முதல் 600 மடங்கு  அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் இருந்து நெல்லை வாங்க மாட்டோம் என மத்திய அரசு எங்கே கூறியது? டி.ஆர்.எஸ் அரசாங்கம் சுமார் 5 லட்சம் டன் நெல்லை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. அதற்கு பதிலாக தெலங்கானா அரசு அதை கள்ள சந்தைப்படுத்துகிறது. தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மாநிலத்தில் வேகமாக செல்வாக்கற்றதாகி வருகிறது. மக்களவை தேர்தலில் தனது மகள்  கே.கவிதாவின் வெற்றியை உறுதி செய்ய முதல்வர் தவறியதில் இருந்து இது தெரிகிறது. கடந்த தேர்தலில் மகளின் வெற்றியை உறுதி செய்ய தவறியவர், அடுத்து வரும் மாநில தேர்தலில்  டி.ஆர்.எஸ். கட்சியை எப்படி வழிநடத்துவார்?

டி.அரவிந்த்

வரும் தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி  10 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. இலவச மின்சாரம் தருவதாக வாக்குறுதி அளித்து விவசாயிகளிடம் வாக்கு கேட்டார் கே.சந்திரசேகர் ராவ். இப்போது ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்கட்டணத்தை 70 சதவீதம் உயர்த்த போகிறார். முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்கு புத்திசாலித்தனம் வேண்டும். தி காஷ்மீர் பைல்ஸ் இனப்படுகொலையின் உண்மை கதை. பொருளாதார பைல்ஸ், விவசாய பைல்ஸ்களுடன் தெலங்கானா ஊழல் பைல்ஸையும் படமாக்க வேண்டும். கே.சி.ஆர் மற்றும் கவிதாவின் அன்னிய முதலீடு பைல்ஸ், போதை மருந்து பைல்ஸ்களையும் படமாக்க வேண்டும். மேலும் கே.சி.ஆர். சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு  அவர் தெரிவித்தார்.