மத கலவர வீடியோ.. பாஜக நிர்வாகியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - ஹைகோர்ட் அதிரடி!
கடந்த சில தினங்களுக்கு முன்பு நபர் ஒருவர் இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு மதத்திற்கு ஆதரவாகவும், ஒரு மதத்திற்கு எதிராகவும் கருத்தக்களை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, திமுகவை சீண்டியிருந்தார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
மதக்கலவரத்தை தூண்டும் வீடியோவை பகிர்ந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், விசாரணையில் சவுதாமணி பதிவிட்ட வீடியோவால் மதக்கலவரம் தூண்டப்படும் என்பது உறுதியாகியுள்ளது என சொல்லப்பட்டுள்ளது.
அவர் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி , சவுதாமணி மீது வழக்குப் வழக்கு பதிவு செய்துள்ளதால் அந்த வழக்கை எதிர்த்து வேண்டுமென்றால் புதிய மனு தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும் தற்போது புகாரின் அடிப்படையில் சவுதாமணியின் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.