பாஜகவுக்கு செல்கிறாரா ஓபிஎஸ்? தேனியில் அமோக வரவேற்பு

 
o panneerselvam

ஆண்டிப்பட்டிக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ -பன்னீர் செல்வத்திற்கு காவி துண்டு அணிவித்து வரவேற்பளித்த தேனி மாவட்ட பாஜகவினரின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு தேனி மதுரை மாவட்ட எல்லைப் பகுதியான கணவாய் மலைப்பகுதியில் கூடிய ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆதரவாளர்கள் மேளம் முழங்க ஆட்டம் பாட்டம் பாடி பூமாலை கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். அங்கிருந்த சாஸ்தா கோவிலில் சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம் தனது வாகனத்தில் உற்சாகமாக கையசைத்தபடி ஆண்டிப்பட்டி நகருக்குள் வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

பின்னர் அங்கிருந்து தேனி நோக்கி சென்ற அவருக்கு  தேனி மாவட்ட பாஜக தலைவர் பி.சி. பாண்டியன் தலைமையிலான பாஜகவினர் காவி துண்டு அணிவித்து வரவேற்பு அளித்தனர். அதை பெற்றுக்கொண்டு அங்கிருந்து தேனி நோக்கி ஓ பன்னீர்செல்வம் புறப்பட்டார். வழி நெடுகிலும் நின்றிருந்த இவருடைய ஆதரவாளர்களும் அதிமுக தொண்டர்களும், ஓபிஎஸ் வாழ்க, ஈபிஎஸ் ஒழிக என்ற கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். ஓ பன்னீர்செல்வத்திற்கு பாரதிய ஜனதா கட்சியினர் அளித்த  காவித்துண்டு வரவேற்பு பரபரப்பை ஏற்படுத்தியது