ராமர் கோயில் கருவறை கதவுகளை திறந்து வைத்தவர் ராஜீவ் காந்தி என்பதுதான் உண்மை... காங்கிரஸ் மூத்த தலைவர் பேச்சு
ராமர் கோயில் கருவறை கதவுகளை திறந்து வைத்தவர் ராஜீவ் காந்தி என்பதுதான் உண்மை என்று காங்கிரஸின் மூத்த தலைவர் பசவராஜ் ராயரெட்டி என்று தெரிவித்தார்
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் பா.ஜ.க.வினர் உண்மைகளை மறைத்து வருவதாக கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர் பசவராஜ் ராயரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பசவராஜ் ராயரெட்டி கூறியதாவது: பாபர் மசூதிக்குள் ராமர் கோயில் கதவுகளை திறந்தது காங்கிரஸ். கருவறையில் பூஜை செய்ய அனுமதித்ததில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முக்கியப் பங்காறறினார். அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதாக பா.ஜ.க கூறுகிறது. இருந்தாலும், ராமர் கோயில் கருவறை கதவுகளை திறந்து வைத்தவர் ராஜீவ் காந்தி என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பசவராஜ் ராயரெட்டியின் கருத்துக்கு பா.ஜ.க.தலைவர்கள் பதிலடி கொடுத்தனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ. பாரத் ஷெட்டி கூறியதாவது: ராம ஜென்மபூமி இயக்கத்திற்கும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும் காங்கிரஸ் எப்போதும் எதிரானது. 2023 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக இந்துக்களை திருப்திப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் (பசவராஜ் ராயரெட்டி) இந்த கருத்தை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹிஜாப் தடை, திப்பு சுல்தான், ஹலால் இறைச்சித் தடை, ஒலிபெருக்கி தடை போன்ற பிரச்சினைகளை அரசியல் கட்சிகள் கடுமையாக எழுப்ப வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.டி. ரவி கூறுகையில், பிரமாண பத்திரங்களில் ராமர் சேது இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது என தெரிவித்தார். மேலும் பா.ஜ.க. கூறுகையில், 2023ம் ஆண்டு கர்நாடக தேர்தலின் போது வாக்காளர்களை உற்சாகப்படுத்தவு், வாக்குகளை சேகரிக்கவும் இது ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று தெரிவித்துள்ளது.