90 வயதை எட்டிய பிறகும் தலைவர்கள் தேர்தலில் போட்டி, ஆனால் இளைஞர்கள் 21 வயதில் ஓய்வு பெற வேண்டுமா?.. பகவந்த் மான்

 
அக்னிபாத் திட்டம்

90 வயதை எட்டிய பிறகும் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள், ஆனால் இளைஞர்கள் 21 வயதில் ஓய்வு பெற வேண்டுமா? என மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சனம் செய்துள்ளார். 

மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்கள் சேர ஏதுவாக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும், 4 ஆண்டுகள் வரை முப்படைகளில்  பணிபுரியலாம். அதன்பிறகு சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள்: பணியில்  இருந்து விடுவிக்கப்படுவர். இவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் எதுவும் வழங்கப்படாது. அதேவேளையில் பணித் திறனின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் நிரந்தரம் செய்யப்பட வாய்ப்புள்ளது. 

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம்

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தை மத்திய அரசு கை விட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் கருத்து தெரிவித்துள்ளார்.

பகவந்த் மான்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இது தொடர்பாக கூறுகையில், இளைஞர்கள் 21 வயதில் ஓய்வு பெற்று முன்னாள் ராணுவ வீரர்களாக மாற வேண்டும் என்பது இளைர்களை கேலிக் கூத்து செய்வதாகும். 90 வயதை எட்டிய பிறகும் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். கருப்பு அக்னிபாத் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இளைஞர்களுக்கு நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.