குஜராத் தேர்தல் முடிவுகள் வியக்க வைக்கும், கருத்து கணிப்புகள் தவறானவை என்பதை நிரூபிக்கும்... பகவந்த் மான் நம்பிக்கை
குஜராத் தேர்தல் முடிவுகள் வியக்க வைக்கும் மற்றும் கருத்து கணிப்புகள் தவறானவை என்பதை நிரூபிக்கும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் நம்பிக்கை தெரிவித்தார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்றும், ஆம் ஆத்மி அதிகபட்சம் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் கூறின. அதேபோல் டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியது. இந்நிலையில், இன்றைய குஜராத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் அளிக்கும் மற்றும் கருத்து கணிப்புகள் தவறானவை என்பதை நிரூபிக்கும் என்று ஆம் ஆத்மியின் பகவந்த் மான் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: போக்குகள் இப்போது முடிவுகளாக மாறி வருகின்றன. 15 ஆண்டு கால காங்கிரஸின் ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிந்த கெஜ்ரிவால், இப்போது பா.ஜ.க.வின் 15 ஆண்டு கால ஆட்சியை பிடுங்கி விட்டார். வெறுப்பு அரசியலை மக்கள் விரும்புவதில்லை. பள்ளிகள், மருத்துவமனைகள், தூய்மை, உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு வாக்களிக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பல பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.
டெல்லி மாநகராட்சியில் நாங்கள் பெரும்பான்மை பெற்றோம். இப்போது டெல்லியில் தூய்மை இருக்கும். பா.ஜ.க. ஆம் ஆத்மியை நிறுத்த விரும்பியதால், அது (பா.ஜ.க.) தனது முழுப் பலத்தையும் களத்தில் இறக்கியது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் போது நான் மீண்டும் உங்களுடன் இருப்பேன். முடிவுகள் வியக்க வைக்கும். தேர்தல் கணிப்புகள் தவறானவை என்பதை நிரூபிக்கும். கட்சி அலுவலகம் சென்று தொண்டர்களுடன் கொண்டாடுவேன். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் விற்பனைக்கு இல்லை என்பதால் பா.ஜ.க. அவர்களை ஆட்சி அமைக்க அணுகாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.