இன்று நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம்.. 2வது முறையாக மோடி நிகழ்ச்சியை புறக்கணிக்கும் நிதிஷ் குமார்?
பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக்கின் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் நிதிஷ் குமார் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆக, ஒரு மாதத்துக்குள் இரண்டாவது முறையாக மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை நிதிஷ் குமார் புறக்கணிக்கிறார்
மத்திய அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது நிதி ஆயோக். இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். நிதி ஆயோக் நிர்வாகக் கவுன்சிலின் ஏழாவது கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. நிதி ஆயோக்கின் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணைநிலை கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், நிர்வாக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.
நிதி ஆயோக்கின் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் முன்னாள் குடியரசு தலைவர் ராம் கோவிந்துக்கு பிரதமர் மோடி அளித்த பிரியாவிடை விருந்து நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, கடந்த ஒரு மாத காலத்துக்குள் பிரதமர் மோடியுடான நிகழ்ச்சியை நிதிஷ் குமார் இரண்டாவது முறையாக தவிர்க்கிறார். அதேசமயம் நிதிஷ் குமார் தற்போதுதான் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார் அதனால்தான் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்க்கிறார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், நிதிஷ் குமார் அந்த கூட்டத்துக்கு துணை முதல்வரை அனுப்ப விரும்பினார். ஆனால், அந்த கூட்டத்தில் முதல்வர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் உறுதியாக தெரிவித்து விட்டதாக தகவல்.
பீகாரில் ஏற்கனவே ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி இடையே அடிக்கடி உரசல் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை நிதிஷ் குமார் தவிர்ப்பது அரசியல் வட்டாரத்தில் புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் இந்த நிதி ஆயோக் நிர்வாகக் கவுன்சில் கூட்டத்தில் வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளடவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.