ஆயிரக்கணக்கான தலித்களை புலிகளுக்கும், முதலைகளுக்கும் இரையாக்கிய கொடூர கம்யூனிஸ்டுகள் - பாஜக விளாசல்
ஆயிரக்கணக்கான தலித் மக்களை புலிகளுக்கும், முதலைகளுக்கும் இரையாக்கிய கொடூர கம்யூனிஸ்டுகள் என்று பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் ஆவண படத்தை தயாரித்திருக்கிறது. இரண்டு பாகங்களாக இந்த ஆவணப்படத்தை வெளியிட்டு இருக்கிறது . குஜராத் இனப்படுகொலைகளை அன்றைய மோடி தலைமையிலான மாநில அரசு நிர்வாகம் எப்படி கையாண்டது என்பது குறித்து புதிய ஆதாரங்களை வெளிப்படுத்தி இருக்கிறது .
இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. இணையத்தில் பார்க்க முடியாத ஆவணப்படத்தை அங்கு பொதுமக்களும், ஜனநாயக ஜனநாயக அமைப்புகளும் திரையிடல் செய்து பார்த்து வருகிறார்கள். சென்னையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆவணப்படம் திரையிடல் செய்வதை போலீசார் தடுத்துள்ளார்கள்.
செல்போனில் படம் பார்த்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது குறித்து மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இந்திய குடிமக்களுக்கு இருக்கும் அடிப்படையான உரிமை ஆவணப்படத்தை பார்த்து செய்தியை தெரிந்து கொண்டு அதன் மீது முடிவு மேற்கொள்வது என்பது. அப்படி இருக்கும் போது அடிப்படை உரிமைக்கு விரோதமாக போலீசாரும் கல்வி நிறுவனங்களும் செயல்படுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் வாய்ப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் இடதுசாரி ஜனநாயக அமைப்புகள் முன்னின்று இந்த ஆவணப்படத் திரையிடலையும் அதன் மீதான உரிய உரையாடலையும் முன்னெடுக்க இருக்கிறோம். பொதுமக்களின் பார்வையில் இருந்து உண்மைகளை மறைப்பது மேலும் மேலும் பிற்போக்கான சூழலுக்கு நாட்டை விட்டு செல்லும் என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நராயணன் திருப்பதி, ‘’மேற்கு வங்காள மாநிலம், நந்திகிராம் மற்றும் சிங்கூரில் நூற்றுக்கணக்கான விவசாயிகளை படுகொலை செய்து, அவர்களின் நிலங்களை பறித்ததோடு, போராடிய தபஸி மாலிக் என்ற 18 வயது இளம்பெண்ணை டிசம்பர் 18, 2006 அன்று கற்பழித்து உயிரோடு கொளுத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், 1979ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம், சுந்தரவனக் காடுகளில் ஆயிரக்கணக்கான தலித் மக்களை புலிகளுக்கும், முதலைகளுக்கும் இரையாக்கி சொந்த மக்களை கொன்று குவித்த கொடூர கம்யூனிஸ்டுகள் குஜராத் கலவரம் குறித்து போலி செய்திகளை தொகுத்து வழங்கிய அந்நிய பிபிசிக்கு ஆதரவு தெரிவித்து, மத அமைதிக்கு ஊறு விளைவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சீன கைக்கூலிகள் இன்று பிரிட்டிஷாரின் கைக்கூலிகளாக செயல்பட்டு தேசத்துரோக செயலில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது’’என்கிறார்.