நாடு முழுவதும் பலர் காங்கிரஸிலிருந்து வெளியேற தயாராக உள்ளனர்.. பா.ஜ.க.வின் சி.டி. ரவி பகீர் தகவல்

 
சி.டி.ரவி

காங்கிரஸூடன் யார் இருக்க விரும்புகிறார்கள்? கோவாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பலர் அந்த கட்சியிலிருந்து வெளியேற தயாராக உள்ளனர் என பா.ஜ.க.வின் சி.டி. ரவி தெரிவித்தார்.

கோவா மாநிலத்தில் பா.ஜ.க.வின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், மாநில பா.ஜ.க. தலைவர்கள் சதானந்த் ஷெட் தனவாடே, மத்திய இணையமைச்சர் ஸ்ரீபாத் ஓய். நாயக், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித், பா.ஜ..க பொதுச் செயலாளர் சி.டி.ரவி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

அந்த கூட்டத்தில் பா.ஜ.க. பொதுச் செயலாளர் சி.டி. ரவி பேசுகையில் கூறியதாவது: எதிர்க்கட்சி (காங்கிரஸ்) எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளனர். காங்கிரஸூடன் யார் இருக்க விரும்புகிறார்கள்? கோவாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பலர் அந்த கட்சியிலிருந்து வெளியேற தயாராக உள்ளனர். ஹர்திக் படேல் மற்றும் சுனில் ஜாகர் ஆகியோர் காங்கிரஸில் இருந்து விலகியதை நாம் பார்த்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹர்திக் படேல்

ஹர்திக் படேல் இந்த மாத தொடக்கத்தில் காங்கிரஸிலிருந்து வெளியேறினார். காங்கிரஸ் தலைமை குஜராத் மற்றும் குஜராத்திகளை வெறுப்பது போல் நடந்து கொள்கிறது என குற்றம் சாட்டினார். ஹர்திக் படேல் தனது ராஜினாமா கடிதத்தில், அயோத்தி ராமர் கோயில் விவகாரம், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமலாக்கம் போன்றவற்றில் காங்கிரஸின் நிலைப்பாட்டை ஹர்திக் படேல் விமர்சனம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.