எம்ஜிஆரின் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் ஓபிஎஸ்-ஐ மன்னிக்காது- சிவி சண்முகம்
கரும்புள்ளியாக உள்ள ஓ.பன்னீர் செல்வம் அதிமுக இரட்டை இலை பற்றியும் ஜெயலலிதா, எம் ஜி ஆரை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சிவி சண்முகம் 51 வது அதிமுக தொடக்கவிழாவினை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியினை மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் ஏற்றி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் சட்டதிட்டங்களை மாற்றலாமா? மாற்றகூடாதா? அப்படி மாற்றினால் எம்ஜிஆரின் ஆன்மா மன்னிக்காது என கூறும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு தகுதி தராதரம் இல்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பதவி ஆசையாலும், வெறியாலும் தனக்கு முதலமைச்சர் பதவி இல்லை என்ற போது அதிமுக இயக்கத்தை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு அருகதை கிடையாது. சாதாரண அடிப்படை தொண்டனுக்கு உள்ள உரிமை கூட ஓ. பன்னீர் செல்வத்துக்கு இல்லை.
பாராசக்தியின் உடைய வசனத்தை மனப்பாடம் செய்து ஸ்டாலின் புகழை புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக ஆட்சி சிறப்பாக உள்ளதாக கூறுகிறார். எனவே அவருக்கும் பன்னீர்செல்வத்துக்கும் அதிமுக பற்றி கூற தகுதியில்லை. எம்ஜி ராமச்சந்திரனால் கொண்டுவரப்பட்ட சட்டவிதியை தன்னுடைய பதவி ஆசை சுயலாபத்திற்காக பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து கட்சியிலையே இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை கொண்டு வந்தவர் ஓ. பன்னீர் செல்வம். எம்ஜிஆரின் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் அதிமுக சின்னத்தை முடக்கியவர்களை மன்னிக்காது. இன்றைக்கு கரும்புள்ளியாக உள்ள ஓ. பன்னீர் செல்வம் அதிமுக இரட்டை இலை பற்றியும் ஜெயலலிதா, எம் ஜி ஆரை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை” என தெரிவித்தார்.