இயலவில்லை மற்றும் விருப்பமில்லை.. ராஜஸ்தான் காங்கிரஸின் பொறுப்பாளர் பதவியை துறந்த அஜய் மாக்கன்
ராஜஸ்தான் காங்கிரஸின் பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அஜய் மாக்கன் அந்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மாக்கன், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகினார். இது தொடர்பாக அஜய் மாக்கன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளராக தொடர இயலவில்லை மற்றும் விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், அஜய் மாக்கன் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய ஒற்றுமை நடைப்பயணம் டிசம்பர் 5ம் தேதி ராஜஸ்தானில் நுழைய உள்ளதால், விரைவில் புதிய பொதுச்செயலாளர் பொறுப்பேற்க வெண்டியது அவசியம்.
கடந்த மூன்று தலைமுறைகளாக காங்கிரஸின் சித்தாந்தத்துடன் திருமணம் செய்து கொண்டு, 40 ஆண்டுகளுக்கு மேலாக தீவிர காங்கிரஸ் அரசியலில் இருந்து வருவதால், நான் எப்போதும் ராகுல் ஜியின் தீவிர சீடராக இருப்பேன். டெல்லியில் காங்கிரஸை வலுப்படுத்துவேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். அதேசமயம், கடந்த செப்டம்பர் 25ம் தேதியன்று நடந்த அரசியல் நிகழ்வுகள் தான் (காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணிப்பு) ராஜஸ்தான் காங்கிரஸின் பொறுப்பாளர் பதவியிலிருந்து அஜய் மக்கன் விலக காரணம் என கூறப்படுகிறது.
டிசம்பர் முதல் வாரத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ராஜஸ்தானில் நுழைய உள்ளநிலையில், ராஜஸ்தான் காங்கிரஸின் பொறுப்பாளர் பதவியிலிருந்து அஜய் மாக்கன் விலகியிருப்பது காங்கிரஸில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ராகுல் காந்தியின் நடைப்பயணம் ராஜஸ்தானுக்குள் நுழைவதற்கு முன் புதிய பொறுப்பாளர் நியமிக்கப்படுவாரா என்று கேள்வியும் எழுந்துள்ளது.