மக்கள் ஆணை இல்லாமல் மாநிலத்தில் கட்சி ஆட்சியை தக்கவைக்கும்.. பா.ஜ.க மேலவை உறுப்பினரின் ஆடியோவை வெளியிட்ட காங்கிரஸ்

 
சி.பி.யோகேஸ்வரா

கர்நாடகாவில் மக்கள் ஆணை இல்லாமல் மாநிலத்தில் எங்க கட்சி ஆட்சியை தக்கவைக்கும் என்று பா.ஜ.க. மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஸ்வரா பேசியதாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஆடியோ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை  தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், மக்களின் ஆணையின்றி தனது கட்சி மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்கும் என்று பா.ஜ.க. மேலவை உறுப்பினர் சி.பி. யோகேஸ்வரா பேசியதாக கூறப்படும் ஆடியோ டேப் ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

காங்கிரஸ்

காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஆடியோ டேப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் ஆனால் மக்கள் ஆணையால் அல்ல, பா.ஜ.க.வுக்கு மக்கள் ஆணை கிடைக்காது ஆனால் ஆட்சி அமைக்கும். மரத்தில் இருக்கும் போது மாம்பழம் பழுக்க வைக்க முடியும் அதேவேளையில் ரசாயன முறையிலும் பழுக்க வைக்க முடியும் என்று சி.பி. யோகேஸ்வரா கூறுவது கேட்டது. 

பா.ஜ.க.

காங்கிரஸ் அந்த ஆடியோவை மேற்கோள் காட்டி, இது பா.ஜ.க.வின் மற்றொரு ஆப்ரேஷன் கமலா சதி என்று குற்றம் சாட்டியுள்ளது. அதேசமயம், ஆடியோ டேப் குற்றச்சாட்டை பா.ஜ.க. மேலவை உறுப்பினர் சி.பி. யோகேஸ்வரா மறுத்துள்ளார். மேலும், அந்த வீடியோவில் பேசிய நபர் நான் இல்லை என்று சி.பி. யோகேஸ்வரா தெரிவித்தார். தற்போது கர்நாடகாவில் இந்த ஆடியோ டேப் வைரலாகி வருகிறது.