சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைப்பது தேவையில்லாதது மற்றும் துன்புறுத்தல்.. காங்கிரஸ்
சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைப்பது தேவையில்லாதது மற்றும் துன்புறுத்தல் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டினார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக கடந்த மாதம் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 5 நாட்கள் விசாரணை நடத்தியது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் கடந்த 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், வரும் 26ம் தேதி (நாளை) மீண்டும் விசாரணைக்கு வரும்படி சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை அனுப்பியதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கூறியதாவது: அன்றைய தினம் (ஜூலை 26) கட்சி அமைதியான முறையில் போராட்டம் நடத்தும். ராகுல் காந்தியிடம் 50 மணி நேர விசாரணைக்கு பிறகு, தற்போது சோனியா காந்தியை அமலாக்கத்துறை அழைத்துள்ளது.
இது தேவையில்லாதது, இது துன்புறுத்தல். வரும் 26ம் தேதியன்று அமைதி போராட்டம் நடத்துவோம். இந்த இயக்கத்தில் இணையுமாற அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 21ம் தேதியன்று பெங்களூருவில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அருகே காங்கிரஸார் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது, 5 வாகனங்களுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர்.