கர்நாடக மக்கள் பா.ஜ.க. அரசை தூக்கி எறிய விரும்புகிறார்கள், இந்த நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு இது... டி.கே.சிவகுமார் தாக்கு
கர்நாடக மக்கள் பா.ஜ.க. அரசை தூக்கி எறிய விரும்புகிறார்கள். இந்த நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு இது என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
கர்நாடகாவில் தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023 மே 24ம் தேதி நிறைவடைகிறது. ஆகையால், 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மே அல்லது அதற்கு முன்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்து இப்போதே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. கர்நாடக காங்கிரஸில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்பமனு பெறப்படுகிறது. இந்நிலையில் சீட்டு விநியோகம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் அதனை கர்நாட காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை. ஒட்டு மொத்த காங்கிரஸூம் ஒன்றுபட்டுள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்று, நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம். கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடக மக்கள் பா.ஜ.க. அரசை தூக்கி எறிய விரும்புகிறார்கள். இந்த நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு இது. இதை மக்கள் உணர்ந்து, சாட்சி அளிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.