அதிமுகவில் 5வது அணி உருவாகிறதா? சலசலப்பை ஏற்படுத்திய சிவி சண்முகம்

 
cv

ஏற்கனவே அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து நிற்கிறது.  இதில் ஐந்தாவது அணி என்று புதிதாக உருவாகிறதா என்ற சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சி.வி. சண்முகம் .  எடப்பாடி ஆதரவாளரான சண்முகம், அவருடன் வந்து எம்ஜிஆர்  சமாதிக்கு அஞ்சலி செலுத்தாமல் தனியாக வந்து அவரது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தியதால் இந்த சலசலப்பு எழுந்திருக்கிறது.

 பழனிச்சாமி அணி, பன்னீர்செல்வம் அணி,  டிடிவி தினகரன் அணி,  சசிகலா அணி என்று அதிமுக நான்காக பிரிந்து நிற்கிறது.   இந்த நான்கு அணிகளையும் ஒன்றுபடுத்தினால்தான்  நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி காண முடியும் என்று பாஜக தொடர்ந்து முயன்ற வருகிறது .  இதில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மூன்று பேரும் ஒற்றுபட ஒரே கருத்தில் இருக்க பழனிச்சாமி மட்டும் இணைய மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

cv

 இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக எம்பியுமான  சண்முகம் கடலூரில் நடந்த போராட்டத்தில் பாஜகவும் திமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது.  கம்யூனிஸ்டுகள் , விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை திமுக கழற்றி விடப் போகிறது என்று பேசி இருந்தார்.  

 இதனால் கடுப்பான அண்ணாமலை,  அதிமுகவின் மூன்றாம் கட்ட தலைவர்கள் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.  தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும் முடிவை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.   அண்ணாமலை மூன்றாம் கட்ட தலைவர் என்று விமர்சித்து இருந்த நிலையில்,  நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சண்முகத்தை இரண்டாம் கட்ட தலைவர் என்று விமர்சனம் செய்திருந்தனர்.  இதனால் எடப்பாடி அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் சி.வி சண்முகத்தை எப்படி மூன்றாம் கட்ட தலைவர் என்று சொல்லலாம் என கண்டனம் தெரிவித்திருந்தார் . 

eo

சி.வி, சண்முகத்தின் பேச்சால் அதிமுக பாஜக கூட்டணியில் எழுந்திருக்கும் இந்த சலசலப்பு கண்டு எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியை குறித்து ஏதும் பேச வேண்டாம் என்று  சண்முகத்திற்கு அறிவுறுத்தி இருக்கிறார்.  இதனால் அதிருப்தியில் இருக்கும் சி.வி. சண்முகம் இன்று எம்.ஜி.ஆர். நினைவு நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அணியினருடன் ஒன்றாக வந்து எம்ஜிஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தாமல் தனியாக தனது ஆதரவாளர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றிருக்கிறார்.  இதனால் அதிமுகவில் புதிய அணி உருவாகிறதா என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது.