திமுக-பாஜக கூட்டணியா? உண்மை என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க போகிறது. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை எல்லாம் திமுக கழற்றி விடப் போகிறது என்று பேசியிருந்தார் அதிமுகவின் எம்பி சிவி சண்முகம்.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , ஒரு கட்சியில் உள்ள தலைவரின் பேச்சை தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர மூன்றாம் கட்ட தலைவர்கள் பேச்சை எல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதற்கு நான் பதில் அளிக்கவும் மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
சி.வி. சண்முகத்தை மூன்றாம் கட்ட தலைவர் என்று சொல்லி இருப்பதற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், சி.வி சண்முகத்தை இரண்டாம் கட்ட தலைவர் என்று விமர்சித்திருக்கிறார்.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது சிவி சண்முகம் குறித்து நயினாராகவேந்திரிடம் கேள்வி எழுப்பிய போது, பாஜக அதிமுக நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு வேண்டுமானால் இருக்கலாம். ஆனாலும் நாங்கள் இதுவரைக்கும் அதிமுக கூட்டணியில்தான் நீடித்து வருகிறோம் . திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மற்றபடி இதற்கு கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களின் பேச்சு அவர்களின் சொந்த கருத்து. அதனை கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.