தேசியக்கொடியில் திமுக ஊழல்! கருணாநிதித்தனம் வேண்டாம்! - ஆதாரத்துடன் அர்ஜூன் சம்பத் காட்டம்
இருபத்து ஐந்து ரூபாய்க்கு அஞ்சல் அலுவலகங்களில் இருந்து தேசியக்கொடியை வாங்கி அதை 50 ரூபாய்க்கு விற்பதாக திமுக அரசு மீது ஆதாரத்துடன் குற்றம்சாட்டியிருக்கிறார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்.
சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா சுதந்திர தின வாரம் அனைத்து வீடுகளில் தேசிய கொடி ஏற்றவேண்டும் என்பதற்காக அஞ்சலகங்களில் தேசியக் கொடிகள் விற்கப்பட்டு வருகின்றன. இதில் 25 ரூபாய்க்கு விற்கப்படும் தேசியக்கொடியை வாங்கி வந்து 50 ரூபாய்க்கு விற்பதாக ஆதாரத்துடன் சொல்கிறார் அர்ஜுன் சம்பத்.
’’இந்திய திருநாட்டில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடுவதை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற நிகழ்விற்காக 10. 8 .2022 புதன்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு முதன்மை கல்வி அலுவலகத்தில் தேசியக் கொடியினை பெற்று செல்லுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேசியக்கொடி தங்கள் பள்ளியின் ஆசிரியர்களின் எண்ணிக்கையின்படி பெறப்பட்டுள்ளதால் தங்கள் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கு தவிர அனைவரின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு கொடியின் விலை 50 ரூபாய் தொகையினை செலுத்தி பெற்று செல்லுமாறு கேட்டு தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் அறிவுரையின் படி தேசிய கொடியினை அரசு விதிகளுக்கு உட்பட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வீடுகளில் ஏற்றி அதன் புகைப்படங்களையும் ஒவ்வொரு ஆசிரியரிடம் இருந்தும் பெற்று அலுவலகத்திற்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது’’ என்று கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பிய கடிதத்தை ஆதாரமாக காட்டி,
’’தபால் நிலையங்களில் ரூபாய் 25/- விற்கும் கொடியினை வாங்கி ரூபாய் 50/- விற்று கொடிக்கு 25 ரூபாய் ஊழல் செய்யும் திமுக அரசு! திமுக அரசாங்கமே அனைவருக்கும் தேசிய கொடியை இலவசமாக வழங்கிடு! ஊழல் நடைபெறுவதை சுட்டிக்காட்டுகிறோம் திருத்திக் கொள்! தேசியக்கொடியில் கருணாநிதித்தனம் வேண்டாம்!’’என காட்டமாக சொல்லி இருக்கிறார்.