அமைச்சரால் அதிருப்தி.. தகராறு.. அறிவாலயத்தில் பஞ்சாயத்து - பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த திமுக நிர்வாகி

 
a

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.   அங்கிருந்த திமுகவினரும் போலீசாரும் அந்த நிர்வாகியின் மீது தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றி உள்ளனர்.   தனக்கு பொருளாளர் பதவி கிடைக்கவில்லை என்பதால் அவர் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

g


திமுக மாவட்ட செயலாளர்  தேர்தலுக்கான மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்துள்ளது.   ஓரிரு தினங்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. போட்டி இருக்கின்ற பட்சத்தில் தேர்தல் நடத்த கட்சி தலைமை திட்டமிட்டு இருக்கிறது.   இதற்கிடையில் திமுக மூத்த அமைச்சர் ஒருவரின் செயல்பாடுகளில் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

 அந்த மூத்த அமைச்சர் தனக்கு நன்கு அறிமுகமான மாவட்ட செயலாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றார்.  அவர்களை எதிர்த்து போட்டியிட்டவருக்கு துணைச் செயலாளர்,  தலைமைச் செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகள் வழங்காமல் ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றார் என்று அதிருப்தியாளர்கள் அதிகரித்துள்ளனர்.

 இந்த நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட திமுகவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இன்றைக்கு அறிவாலயத்தில் பஞ்சாயத்து நடக்கிறது.  இதற்கிடையில் உட்கட்சி தேர்தலில் தனக்கு பொருளாளர் பதவி கிடைக்கவில்லை என்று சென்னை பெரம்பூர் திமுக நிர்வாகி அமல்ராஜ் பெட்ரோல் கேனுடன் நேற்று அண்ணா அறிவாலயத்திற்குள் நுழைந்திருக்கிறார்.    பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி நுழைந்து உள்ளே நுழைந்த அவர்,  அங்கு தீக்குளிக்க முயற்சித்துள்ளார் .இதை பார்த்த திமுகவினரும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அமல்ராஜ் மீது தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றி இருக்கிறார்கள்.  இதனால் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது.