தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்.. முதல்வர் பதவியை துறந்த தாக்கரே.. நாளை முதல்வராகிறார் பட்னாவிஸ்

 
பாஜகவுக்கு  வாக்களிக்க வேண்டாம், பாரதத்துக்கு வாக்களியுங்கள்: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததையடுத்து, முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் நாளை முதல்வராக பதவியேற்கிறார் என தகவல்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனை தொடர்ந்து பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆளும் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் மகாராஷ்டிராவின் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் மகாராஷ்டிரா கவர்னரை சந்தித்து நாளை நம்பிக்கை வாக்கெடுக்கும்படி ஆளும் அரசுக்கு உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால், மகாராஷ்டிரா சட்டப்பேரவையை  ஜூன் 30ம் தேதி (இன்று) கூட்டி முதல்வர் உத்தவ் தாக்கரேவை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

தேவேந்திர பட்னாவிஸ், பகத் சிங் கோஷ்யாரி

ஆனால் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவ சேனா மனு தாக்கல் செய்தது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க மறுத்து விட்டது. இதனையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கவர்னர் மாளிகைக்கு சென்று பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை உத்தவ் தாக்கரே வழங்கினார். உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வேளைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. 

கிளர்ச்சி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள்

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் நாளை முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் நேற்று சிவ சேனாவின் கிளர்ச்சி எம்.எல்.ஏ,க்களை தொடர்பு கொண்டு பேசினார். மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் இன்று மகாராஷ்டிராவுக்கு வர வேண்டாம். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்கும் நாளில் (நாளை) வந்தால் போதும் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார். சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் தற்போது கோவாவில் உள்ளனர். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு பேஸ்புக்கில் அவர் பேசுகையில், நான் எதிர்பாராத விதத்தில் (அதிகாரத்துக்கு) வந்திருந்தேன். அதே பாணியில் இப்போது வெளியே செல்கிறேன். நான் நிரந்திரமாக போகப் போவதில்லை?, இங்கேயே இருப்பேன், மீண்டும் சிவ சேனா பவனில் அமர்வேன். நான் என் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன். முதல்வர் பதவியையும், மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். சிவ சேனா தலைவரின் மகனை வீழ்த்தும் புண்ணியத்தை அவர்கள் (ஏக்நாத் தலைமையிலான சிவ சேனாவின் கிளர்ச்சி எம்.எல்.ஏ,க்கள்) பெறட்டும் என தெரிவித்தார்.