டெல்லியில் இபிஎஸ்! சென்னையில் ஓபிஎஸ்! உச்சகட்ட பரபரப்பு
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இரண்டிலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது. ஒரே நாளில் ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அன்று அதிமுகவில் ஒற்றை தலைமை தீர்மானம் ஏற்றப்பட இருந்ததால் அதற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார். அவரின் மனுவை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று சொல்லி தடை விதிக்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்து சண்முகம் உடனே மேல்முறையீடு செய்ததில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து புதிய தீர்மானங்கள் எதுவும் இயற்றக் கூடாது என்று தடை விதித்தனர் . ஆனாலும் அந்த தடையை மீறி புதிய தீர்மானங்கள் ஏற்றப்பட்டன. அதன்படி வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுகிறது.
இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சண்முகம் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் மனுவை விசாரித்த நீதிபதிகள் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான அந்த மனுவை விசாரிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். இதன் பின்னர் ஓ .பன்னீர்செல்வம் பொதுக்குழுவிற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
பொதுக்குழு நடைபெறுவதற்கு 15 தினங்களுக்கு முன்பாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்பது வழக்கம் . ஆனால் பொதுக்குழுவிற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது தான் தனக்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார்கள் . இது முறையற்ற செயல் . அதனால் இந்த பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று அவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
ஓ. பன்னீர் செல்வத்தின் மனு மீதான விசாரணை இன்று அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிக்கப்பட இருக்கிறது. இதனால் பொதுக்குழு திட்டமிட்டபடி வரும் 11ம் தேதி நடைபெறுமா என்று கேள்வி எழுந்திருக்கிறது. அதேபோல் அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த மனு இன்று விசாரணை வர இருக்கிறது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி அன்று அதிமுக பொது குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது . நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி , கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரிக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. ஓ. பன்னீர்செல்வத்தின் நடத்தையால் அதிமுகவின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன என்றும் , அதிமுகவின் செயல்பாட்டிற்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கும் ஓ. பன்னீர்செல்வம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் கட்சி நிதியை விடுவிக்காததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை இருக்கிறது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
ஒற்றை தலைமைக்காக 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது . ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்கில் இன்று என்ன தீர்ப்பு அளிக்கப்பட இருக்கிறது என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.
ஒரே நாளில் அதிமுக பொதுக்கூட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது