திட்டமிட்டு ரகளை -பொ.செ. ஆகிவிட எடப்பாடி எடுத்த பகீரத முயற்சி
எப்படியாவது ஒற்றைத் தலைமையை கொண்டுவந்து தான் பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக அவர் பகீரத முயற்சிகளை எடுத்து வருகிறார். அதன்படி திட்டமிட்டு தான் பொதுக்குழுவில் ஆதரவாளர்களால் ரகளையை ஏற்படுத்தி பொதுக்குழுவை பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் அடுத்த பொதுக்குழுவுக்கான தேதி குறிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் .
இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் முன்னரே வரைவு செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர தனித் தீர்மானங்கள் எதையும் நிறைவேற்ற கூடாது, அது குறித்து முடிவு எடுக்கவும் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் இன்றைக்கு தனித் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
தீர்ப்பு வந்ததுமே எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் ஆலோசனை நடத்தி இன்றைக்கு பொதுக்குழுவை சுமூகமாக நடக்க விடாமல் ரகளை செய்து பாதியிலேயே நிறுத்திவிட்டு அடுத்த மாதம் தள்ளி வைக்க முன்னரே திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள். அதன்படியே ஓபிஎஸ் பொதுக்குழு அரங்கிற்கு உள்ளே வந்ததுமே துரோகி வெளியே போ வெளியே போ என்று எடப்பாடி ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர் . மேடையிலும் சிவி சண்முகம், வேலுமணி உட்பட எவரும் ஓபிஎஸ்-க்கு மரியாதை தரவில்லை.
அடுத்ததாக தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக அறிவிக்கப்பட்டு அவருக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர்கொத்து வழங்கினார். அப்போது ஓபிஎஸ் கண்டுகொள்ளப்படவில்லை. இதற்கு அடுத்ததாக சிவி சண்முகம் மைக்கை பிடித்து, ’’ நான் இருபத்தி மூன்று தீர்மானங்களையும் நிராகரிக்கிறேன். இந்த பொதுக் குழுவும் 23 தீர்மானங்களை நிராகரிக்கிறது’’என்று சொன்னார். அடுத்துப் பேசிய கேபி முனுசாமியும் அதையே சொன்னார்.
சி வி சண்முகம் பேசியபோது, பொதுக் குழு உறுப்பினர்களால் ஒற்றை தலைமை வேண்டும் என்று கையெழுத்து இடப்பட்டு இருப்பதாக ஒரு கடிதத்தைப் படித்தார். அதை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இடம் கொடுத்தார். அதைப்படித்த அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஒற்றை தலைமை வேண்டும் என்கிற கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடக்கும் தேதியை இன்றைக்கே அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். அதனால் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
இதனால் கடுப்பான ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோர் மேடையை விட்டு இறங்கி வெளிநடப்புச் செய்தனர். மேடையை விட்டு வெளியேறும்போது , ‘’இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது. சட்டத்திற்கு புறம்பாக நடக்கிறது. இது சட்டவிரோதமானது. பொதுக்குழு தேதி அறிவிப்பு எல்லாம் சட்டவிரோதமானது’’ என்று கொந்தளித்து விட்டு வெளியேறினார் வைத்திலிங்கம். ‘’ அதிமுகவை அழிக்க சதி நடக்கிறது’’ என்றும் ஆவேசமாகக் கூறிவிட்டுச் சென்றார்.