சென்னையில் ஓபிஎஸ் பேட்டி- சேலத்தில் ஈபிஎஸ் தீவிர ஆலோசனை

 
eps

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி. முனுசாமி , நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் சேலம் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு  யுக்திகளை கையாண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை  வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் எதிர் கோசம்  எழுப்பினர்.இதனால் சர்ச்சை வெடித்தது.  

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன்  தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல்  இன்று காலை சென்னையில் இருந்து சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலம் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலையில் எடப்பாடி பழனிச்சாமி யுடன் அவரது இல்லத்தில்  மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். முன்னாள் அமைச்சரும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி , நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் பா.மோகன், எஸ்.ராமச்சந்திரன் மற்றும் மாநில இளஞர்  மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரமசிவம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாஜக மாநில துணைத்தலைவர் இராமலிங்கம் இல்லத் திருமண விழா சேலத்தில் நடைபெற்ற விழாவில் அனைவரும் கலந்து கொண்டனர்.