"முழு பூசணிக்காய சோத்துல மறைக்கலாமா உத்தமங்களா?" - எடப்பாடி சுளீர்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரக் கூடத்தில் பேசிய கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்தை போடுவார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். செய்ய வேண்டியது தானே, யார் யார் மேலோ குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறீர்களே, இந்த நீட் தேர்வு வருவதற்கு காரணமே காங்கிரசும், திமுகவும் தான்.
ஏனென்றால் கிராமப்புற மக்களுக்கு நிறைய பேருக்குத் தெரியாது. 2010 டிசம்பர் 21, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. அப்போது திமுக அந்த ஆட்சியில் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அதில் இணை அமைச்சராக இருந்தவர், திமுகவைச் சேர்ந்த நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் காந்திச்செல்வன். அப்போதுதான் நீட் தேர்வையே கொண்டு வந்தார்கள்.
ஆனால் இது அனைத்தையுமே திமுகவினர் மறைக்கின்றனர். மக்களிடம் எதுவுமே தெரியாதது போல பேசிக் கொண்டுள்ளனர். இவ்வளவு பெரிய பொய்யை யாராலும் பேச முடியாது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற ஒரே கட்சி திமுகதான். இத்தனையும் செய்துவிட்டு உத்தமபுத்திரன் மாதிரி பேசிக் கொண்டுள்ளனர். அனிதாவிலிருந்து இன்றைக்கு பல பேர் இறந்துவிட்டார்கள், அதற்கு யார் காரணம் திமுகவும், காங்கிரசும்தான் காரணம், அதிமுக இல்லை” என்றார்.